ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு
ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அலிபாக் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அலிபாக் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுவன் கொலை
ராய்காட் மாவட்டம் கர்ஜத் தாலுகாவில் உள்ள டாமட் கிராமத்தை சேர்ந்த வாலிபர் சல்மான் நஜே (வயது22). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை அங்குள்ள ஒரு பழத்தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அங்கு வைத்து சிறுவனை மிரட்டி அவர் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டார். அவன் இதுபற்றி வெளியில் சொல்லி விடுவானோ என பயந்த சல்மான் நஜே அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இந்தநிலையில், சிறுவனின் குடும்பத்தினர் அவனை காணாமல் தேடி அலைந்தனர். அப்போது, தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக சல்மான் நஜே அவர்களுடன் சென்று தேடுவது போல் நாடகமாடினார். ஆனால் சிறுவன் எங்கும் கிடைக்காததால் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சிறுவனை தேடி வந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்தநிலையில், சிறுவனின் பாட்டி மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சல்மான் நஜேயுடன் அவன் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்ததாக போலீசில் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சல்மான் நஜேயை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார், அவனை கொலை செய்த சல்மான் நஜேயை கைது செய்து, அவர் மீது அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு சல்மான் நஜேவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.