நெல்லையில் பயங்கரம்: புதுப்பெண் சரமாரி வெட்டிக்கொலை போலீஸ் நிலையத்தில் தம்பி சரண்

நெல்லையில் புதுப்பெண் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2019-03-27 22:30 GMT
நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உண்டு. மூத்த மகன் அறிவானந்தம், நெல்லையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளார். இளைய மகன் சுந்தரபாண்டியன் (வயது 20), நெல்லை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

மூத்த மகள் கனிமொழி (25). பி.இ. முடித்து உள்ளார். இவருக்கும், ஏர்வாடி அருகே உள்ள தென்திரிபேரியை சேர்ந்த லெனின் பெரியசாமி(30) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. லெனின் பெரியசாமி, பட்டப்படிப்பு படித்ததாக கூறி உள்ளார். ஆனால் அவர் பட்டப்படிப்பு படிக்கவில்லையாம். மேலும் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

திருமணம் ஆன சில நாட்களிலேயே கனிமொழிக்கும், அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கனிமொழி, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவியை சேர்த்து வைக்க ஊர் முக்கிய பிரமுகர்களும், உறவினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இது கனிமொழியின் தம்பி சுந்தரபாண்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் தனது அக்காள் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே கணவருடன் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டாளே என அக்கம்பக்கத்தினர் கூறுவார்கள் என்று நினைத்த சுந்தரபாண்டியன், நேற்று முன்தினம் இரவில் தனது அக்காளிடம், நீ உன் கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறினார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பெற்றோர் சமரசம் செய்து வைத்துவிட்டனர். பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்து எழுந்து வந்த சுந்தரபாண்டியன், அங்கு தூங்கிக்கொண்டு இருந்த கனிமொழியை, அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கனிமொழி அலறி சத்தம் போட்டார். உடனே சுந்தரபாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வெட்டுக்காயம் அடைந்த கனிமொழி ரத்த வெள்ளத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பிணத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சுந்தரபாண்டியன் அரிவாளுடன், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் புதுப்பெண்ணை அவரது தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்