வேதாரண்யம் அருகே, குளத்தில் மூழ்கி 3 வயது ஆண் குழந்தை சாவு
வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி பூவன்தோப்பை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவருடைய மகன் மணிமாறன்(வயது3). இவரது வீட்டின் அருகே குளம் உள்ளது. நேற்று மாலை குருமூர்த்தியின் மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணிமாறன் அருகே உள்ள குளக்கரைக்கு சென்று குளத்தில் இறங்கினான். இதை யாரும் கவனிக்கவில்லை. இதனால் குழந்தை மணிமாறன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். சிறிது நேரம் கழித்து மகனை காணாமல் தவித்த குருமூர்த்தியின் மனைவி மகனை அனைத்து இடங்களிலும் தேடினார். ஆனால் மணிமாறன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அருகே உள்ள குளத்தில் ஒரு குழந்தை உடல் மிதப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குருமூர்த்தியின் மனைவி மற்றும் உறவினர்கள் குளத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது குளத்தில் குழந்தை மணிமாறன் பிணமாக மிதந்து கொண்டிருந்தான். குழந்தையின் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.