திருச்சி சிந்தாமணி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினார்கள்.
திருச்சி,
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கில் தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களால் போக்குவரத்து நெருக்கடி உள்பட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் போடப்படும் சாலைகளும் சேதப்படுத்தப்படுகிறது. எனவே அவற்றை அகற்றுவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் ஊரக பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த 58,172 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களையும் அகற்றிவிட்டு அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் ஏப்ரல் 1-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின்படி திருச்சியில் கொடிக் கம்பங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சாலையோரம் ஒரே இடத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இருந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கல்வெட்டுக்கள் தார்ப்பாய் சுற்றி மூடி வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கொடிக்கம்பங் கள் மற்றும் கல்வெட்டு பெயர் பலகைகளை பொக்லைன் எந்திரங்களின் மூலம் இடித்து அகற்றினார்கள். போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடந்தது. திருச்சி நகரில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றும் பணி தொடர்ந்து நடக்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.