ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளுக்கு 2,537 வாக்குப்பதிவு எந்திரங்கள் - லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன
ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 537 வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில்அனுப்பி வைக்கப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதிசெய்யும் வி.வி.பேட் எந்திரங்கள் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு 888 வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு 826 வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள், கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 823 வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 537 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டியில் பிரிக்ஸ் பள்ளி, குன்னூரில் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி, கூடலூரில் புனித தாமஸ் பள்ளியிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த எந்திரங்கள் நாடாளுமன்ற தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குச்சாவடி தலைமை அதிகாரி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச்சாவடிகள், கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 221 வாக்குச்சாவடிகள் உள்ளன. தொகுதிகள் வாரியாக அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.