தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தம்பிதுரை பேச்சு

தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என தம்பிதுரை கூறினார்.

Update: 2019-03-27 23:00 GMT
கரூர், 

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை நேற்று தாந்தோணிமலை ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, ஏமூர், ஏமூர் புதூர், குன்னனூர், உப்பிடமங்கலம், ரெங்கபாளையம், ஜோதிவடம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் பைபாஸ் எம்.பி. என்று சிலர் ஏளனம் செய்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றை மட்டும் தான். ஆம் நான் மக்களின் போக்குவரத்து வசதிக்காக பைபாஸ் சாலையை அமைத்த எம்.பி. என்று. அது தெரியாமல் சின்னப்பையன் (செந்தில்பாலாஜி) ஒருவர் உளறி கொண்டிருக்கிறார். அரவக்குறிச்சி தொகுதிக்கு எம்.எல்.ஏ. இல்லாதது ஒரு சாபமாக ஆகிவிட்டது. கட்சி விட்டு, கட்சி மாறி கொண்டிருக்கும் ஒரு நபரால் தான் இந்த நிலை என்று மக்களுக்கு புரியும்.

இனியும் தமிழகத்தில் கை சின்னத்திற்கு ஓட்டு போட்டீர்கள் என்றால், கையளவு கூட காவிரி நீர் கிடைக்காது. கை சின்னம் ஜெயித்தால் வெற்றுக் கை தான் காண்பிப்பார்கள். ஆகவே இந்த எம்.பி தேர்தலிலும் சரி, அது முடிந்தும் அரவக்குறிச்சி தொகுதிக்கு வரும் இடைத்தேர்தலிலும் சரி, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நாங்கள் மக்களுக்கான ஆட்சியாளராக தான் திகழ்கிறோம்.

கடந்த முறை எனக்கு வாக்களித்து என்னை புகழ்ந்து, பல திட்டங்களை கொண்டு வந்தவர் தம்பித்துரை என்று புகழ்ந்த செந்தில் பாலாஜி, நாளை இதே பகுதிக்கு வந்தால் பைபாஸ் எம்.பி என்று சொல்வார். அந்த பேச்சுக்கெல்லாம் செவி சாய்க்காதீர்கள். தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.கீதா எம்.எல்.ஏ. கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் முருகானந்தம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாக்குகள் சேகரிக்கும்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.

ஏமூர் பகுதியில் தம்பிதுரை வாக்குகள் சேகரித்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என்று கேட்டனர். அப்போது தண்ணீர் பிரச்சினை தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்க வேண்டும் என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்