கேரளாவுக்கு, மாட்டு வண்டிகளில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு மாட்டு வண்டியில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-27 23:00 GMT
உத்தமபாளையம், 

தேனி மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வருவாய்த்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் போலீசார் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கேரள மாநிலத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்கின்றனர். இந்த கடத்தல்காரர்களை போலீசார் அவ்வப்போது மடக்கி பிடித்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூரில் இருந்து மாட்டு வண்டிகளில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் கடத்தி செல்வதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர்-குமுளி மலைப்பாதையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவை நோக்கி சென்ற 2 மாட்டு வண்டிகளை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். மாட்டுவண்டியில் காய்கறி மூட்டைகளுடன் நூதன முறையில் மறைத்து வைத்து 21 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

இதை தொடர்ந்து மாட்டுவண்டிகள் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டிகளை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த ராஜாங்கம் (வயது 47), அஜித் (24) என்றும், கூடலூரில் இருந்து கடத்தி சென்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்