மன்னார்குடியில், பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து, உரிமையாளர் உள்பட 6 பேர் உடல் சிதறி பலி - 3 பேர் படுகாயம்

மன்னார்குடியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-03-27 23:30 GMT
மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 60). இவருடைய மனைவி கோமதி. மன்னார்குடி நகராட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர், அ.தி.மு.க.வில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். சிங்காரவேலுவுக்கு சொந்தமான பட்டாசு ஆலை மன்னார்குடி நகர் பகுதியில் உள்ள பாமணி ஆற்றங்கரையோரம் செயல்பட்டு வந்தது.

இங்கு கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசுகள், வான வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்தன. திருவாரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக இந்த ஆலைக்கு வருவது வழக்கம்.

பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகளவு நடைபெறும் என்பதால், இந்த ஆலையில் பட்டாசு மற்றும் வான வெடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று காலை 9 மணி அளவில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிங்காரவேலு வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக ஆலைக்கு சென்றார்.

அங்கு சிங்காரவேலின் மாமனாரும், மன்னார்குடியை சேர்ந்தவருமான வீரையன், தொழிலாளர்கள் மோகன் (55), பாபு(40), அறிவுநிதி(28), தஞ்சை மாவட்டம் வடசேரியை சேர்ந்த சுரேஷ்(40) ஆகிய 5 பேரும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் ஆலையில் இருந்த வெடிமருந்தில் திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் வெடிமருந்து முழுவதும் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், ஆலையின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அங்கு இருந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, அறிவுநிதி சுரேஷ் ஆகிய 6 பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

கட்டிடத்தின் வெளிப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஷேக்(25), முத்து(55), சோமசுந்தரம்(55) ஆகிய 3 பேரும் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கிருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட உடல்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படுகாயம் அடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த ஷேக் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப் அங்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்