கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய தொகுதிகளில் 11 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் தொகுதிகளில் மொத்தம் 11 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கோலார் தங்கவயல்,
கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் தொகுதிகளில் மொத்தம் 11 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பரிசீலனை
நாடு முழுவதும் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. அதேபோல் கர்நாடகத்திலும் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் கோலார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் தலைமையில் நடந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அந்த 3 வேட்புமனுக்களும் சுயேச்சை வேட்பாளர்களான கோவிந்தப்பா, வள்ளல் முனிசாமி மற்றும் வெங்கடரமணப்பா ஆகியோருடையது ஆகும். விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது, பெயர் மற்றும் கையெழுத்து சரியாக ஒத்துப்போகாதது ஆகிய காரணங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
இதேபோல், சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 26 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அனிருத் ஷர்வண் தலைமையில் நடந்தது. இதில் 8 சுயேச்சை வேட்பாளர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 18 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதன்மூலம் கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 11 சுயேச்சை வேட்பாளர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.