ஜனநாயக உரிமைக்காக போராடும் விவசாயிகளை ஜெயிலில் அடைப்பது கண்டனத்துக்குரியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

ஜனநாயக உரிமைக்காக போராடும் விவசாயிகளை ஜெயிலில் அடைப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-03-27 23:30 GMT

ஈரோடு,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று ஈரோடு வந்தார். அப்போது, உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்த்து ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளி வந்த விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும், வாழ்த்தும் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

உயர் மின்கோபுரம் அமைக்கப்படும் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் போராட்டம் மின்சாரம் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காக அல்ல. கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும், விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்பதுதான். ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற அதிக செலவு ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. கேபிள் அமைக்கும் பணியை நிறைவேற்றுவது அரசு அல்ல. அதற்காக நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் செய்கிறது.

எனவே அரசு தனியார் நிறுவனத்தை கட்டாயப்படுத்துவதை விட்டு விட்டு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. இதை எதிர்க்கும் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்து ஜெயில் அடைக்கிறது. பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவோ இந்த அரசும், போலீசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை பாதுகாப்பதை குறிக்கிறது.

ஆனால் ஜனநாயக உரிமையை பாதுகாக்க போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி, கைது செய்து ஜெயிலில் அடைக்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் குற்றவாளிகளை விட விவசாயிகள் ஜெயிலில் அடைக்கும் அளவுக்கு சமூக விரோதிகளா?. காவல்துறை சமூக விரோதிகளுக்கு பக்கபலமாக இருக்கிறதா?.

மேலும், சமூக வலைதளங்கள் ஆபாச படங்களை கட்டுக்கடங்காமல் பரவச்செய்து பாலியல் உணர்வுகளை தூண்டி கலாசார சீர்கேடு ஏற்படுத்துவதாக உள்ளன. ஒட்டு மொத்த சமூக பாரம்பரிய, பண்பாட்டு கலாசாரங்களை உருக்குலைக்கும் ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. மேலும் உள்ள 3 தொகுதிகளுடன், தற்போது காலியாக உள்ள சூலூர் தொகுதியையும் சேர்ந்து 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 13–ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைத்தை கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறதா? அல்லது ஆளும் கட்சிகளின் கைப்பாவையாக செயல்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு உண்டு. ஆனால் ஆளும் கட்சியினர் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதும், எதிர்க்கட்சிகள் ஒரு பொதுக்கூட்டம், ஊர்வலம், தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும் என்றால் கூட அதற்கு அனுமதி பெற அலைக்கழிப்பு செய்வதுமாக உள்ளது. ஒரு அனுமதி பெறுவதற்குள் அலுத்துப்போகும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நடக்கிறது.

இந்த நிலை தொடராமல் தேர்தல் வரை தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஆளும் கட்சியினர் கோடிக்கணக்கில் பணத்தை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக ‘வாட்ஸ்அப்’ போன்ற இணையங்களில் காட்சிகள் வெளிவந்து உள்ளன. அவற்றை தடுக்க வேண்டும்.

என்னதான் பணம் கொடுத்தாலும், வரம்புக்கு மீறி சலுகைகள் அறிவித்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி, 2½ ஆண்டுகளாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மக்கள் விரோத ஆட்சி, செயல்பாடுகள் அவர்களுக்கு எதிராக உள்ளது.

ஆளுகின்ற அரசை எதிர்த்து பேசிய முகிலன் காணாமல் போய் 1½ மாதங்கள் ஆகிறது. ஆனால் அவரை கண்டுபிடிக்க அரசும், காவல்துறையும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் தானாக மறைந்திருந்தால் இத்தனை நாள் இருக்க முடியாது. எனவே அவர் கடத்தி வைக்கப்பட்டு இருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் நடந்து விட்டதா? என்பதை போலீசும், அரசும் தெளிவுபடுத்துவதுடன், அவரை மீட்டு மனைவி மற்றும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஏதோ காரணங்களை கூறி போலீசார் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது சரியல்ல. தேர்தலுக்கு பின்னர் ஈரோடு மாவட்ட போலீசை கண்டித்து போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ரகுராமன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், உயர்மின் கோபுர எதிர்ப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, கி.வே.பொன்னையன், கவின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்