வானவில் : ராணுவத்தினரின் ஸ்மார்ட் வாட்ச் அணிய ஆசையா?
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் வாட்சுகள் நம்மிடையே மிகவும் பிரபலம்.
பெரும்பாலும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் ஸ்மார்ட் வாட்ச் கட்டாயமாக இருக்கிறது. ஆனால் ஸ்மார்ட் வாட்ச்கள் எளிதில் உடையும் தன்மை கொண்டவை. அவை பெரும்பாலும் உறுதியான பிளாஸ்டிக் மேற்பாகத்தைக் கொண்டிருப்பதால் லேசாக கை எங்கேயாவது பட்டாலே ஸ்மார்ட் வாட்ச் கதி அதோ கதிதான். அனைத்து சூழலையும் தாக்குப் பிடிக்கும் ராணுவ வீரர்கள் அணியும் கைக் கடிகாரம் இப்போது சாதாரண குடிமகன்களுக்கும் கிடைக்கும். டிவாட்ச் ( tact watch ) நிறுவனம் இதை சாத்தியமாக்கியுள்ளது. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் தாக்குப்பிடிக்கும் வகையில் எளிதில் ஸ்கிராட்ச் ஆகாத தன்மையுடன் இது உள்ளது.
இதில் புழுதி படிவது கிடையாது. வாட்டர் புரூப் தன்மை கொண்டது. ராணுவத்தில் பணியாற்றிய பொறியாளர்கள் உருவாக்கியதுதான் இந்த உறுதியான கைக்கடிகாரமாகும். இதில் 21 மி.மீ. தடிமனான ஸ்டிராப் உள்ளது. இது எவ்வித ஒவ்வாமையையும் (அலர்ஜி) கை மணிக்கட்டில் ஏற்படுத்தாது. நெகிழும் தன்மை கொண்டது. துருபிடிக்காதது. இதன் மேல்பாகம் ஸ்டீலால் ஆனது. இது அனைத்து வகையான அதிர்வுகளையும் தாங்கக் கூடியது. இதில் நான்காம் தலைமுறை கொரில்லா கிளாஸ் உள்ளது. இதனால் கண்ணாடி எளிதில் உடையாது.
கடிகாரத்தின் மேல் பகுதி கார்பன் கோட்டில் உள்ளது. இது கடிகாரத்துக்கு நீடித்து உழைக்க வழி வகுக்கிறது. அன்றாட பணி மற்றும் வெளியில் விளையாட்டு மற்றும் நீச்சல் போன்றவற்றின்போதும் இதை அணிந்திருந்தாலும் பாதிக்கப்படாது. 164 அடி ஆழம் வரை நீரில் சென்றாலும் நீர் உள்புகாத தன்மை கொண்டது. இதில் உள்ள பேட்டரி 33 மாதங்கள் வரை செயல்படும் தன்மை கொண்டது. சூரிய ஒளியிலும் இதில் கண் கூசாமல் தெளிவாக மணி பார்க்க முடியும். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்கு தளத்தில் செயல்படக் கூடியது.
இதனால் உங்களது அன்றாட உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்யும். போனில் அழைப்பு வந்தால் அதை உணர்த்தும். இதில் புளூடூத் 4.0 உள்ளது. உடலில் எவ்வளவு கலோரி சத்து எரிக்கப்பட்டது என்ற விவரத்தையும் இது தெரிவிக்கும்.
இதன் மூலம் ரிமோட் கேமராவை செயல்படுத்த முடியும். சமூக வலைத் தளங்களில் கருத்துகளையும் பகிர முடியும். ஸ்மார்ட் வாட்சுகளுக்குரிய அனைத்து அம்சங்களோடு, அனைத்து புறச் சூழல்களையும் தாங்கி ராணுவ வீரர்களைப்போல நிற்கும் இந்த டி1 வாட்சின் விலை 70 டாலராகும். இந்தியாவில் ரூ.6,101 விலையில் இது தற்போது கிடைக்கிறது.