மும்ரா அருகே ரூ.21¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் பெண் உள்பட 4 பேர் கைது
மும்ரா அருகே வாகனத்தில் கொண்டு வந்த ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்ரா அருகே வாகனத்தில் கொண்டு வந்த ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு பணம்
நாடாளுமன்ற தேர்தல் மராட்டியத்தில் அடுத்த மாதம் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தானே மாவட்டம் மும்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை போட்டனர்.
4 பேர் கைது
இதில், அந்த வாகனத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 87 ஆயிரம் திர்ஹாம், 7,700 அமெரிக்க டாலர் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
இது குறித்து அதிகாரிகள் வாகனத்தில் இருந்த பெண் உள்பட 4 பேரிடமும் விசாரித்தனர். அந்த வெளிநாட்டு பணம் தொடர்பாக 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் அப்துல் சேக் (வயது54), ரபிக் கான்(52), அம்ஜத் கான் (42), மற்றும் பெண் மும்ராஜ்ஜான் சேக்(47) என்பது தெரியவந்தது.
வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி போலீசார் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கைதான 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.