கள்ளக்குறிச்சி அருகே, கிராம மக்கள் சாலை மறியல் - தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி நடந்தது
கள்ளக்குறிச்சி அருகே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதில் இருந்து ஊராட்சி நிர்வாகம் மூலம் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதமாக மாரியம்மன் கோவில் தெரு, ராஜீவ்காந்தி நகர் பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் குழாயில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணிக்கு கள்ளக்குறிச்சி-விளம்பார் சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஒரு சில நாட்கள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது, சிலர் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் தடையின்றி குடிநீர் வழங்குவதோடு, மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.