கல்வெட்டை அகற்ற எதிர்ப்பு தி.மு.க.வினர் தர்ணா போராட்டம்

செம்பனார்கோவில் அருகே கல்வெட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-26 22:30 GMT
பொறையாறு,

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் அண்ணாசிலையையொட்டி தி.மு.க. கல்வெட்டு உள்ளது. இது கடந்த 2008-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் உள்ள தி.மு.க. கல்வெட்டை பொக்லின் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்ற முயற்சித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கொளஞ்சி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கல்வெட்டை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்வெட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பட்டா இடத்தில் கல்வெட்டு இருப்பதால் அதனை அகற்றக்கூடாது என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் சேயோன், வக்கீல் அணி ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கல்வெட்டு இருக்கும் இடம் பட்டா என்பதற்கான ஆவணங்களை விரைவில் சமர்பிப்பதாக கூறினர். இதனையடுத்து கல்வெட்டு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

முன்னதாக தாலுகா அலுவலக சர்வேயர் சிந்துஜா, வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பன்னீர்செல்வம், சிவசங்கர், உதயகுமார், அசாருதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் மேலமுக்கூட்டில் கல்வெட்டு உள்ள பகுதியை அளந்து பார்த்தனர். அதற்கான அறிக்கையை தரங்கம்பாடி தாசில்தாரிடம் சமர்பிப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

இதைப்போல மயிலாடுதுறையில் சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கல்வெட்டுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதையொட்டி மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் சித்திவிநாயகர் கோவில் சுற்றுச்சுவர் பகுதியில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க., திராவிடர் கழகம் மற்றும் தொழிற் சங்கங்களின் கல்வெட்டுகளை பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கோவிலின் எதிர்புறம் இருந்த தி.மு.க.வின் கல்வெட்டை அகற்ற முயற்சித்தனர்.

அப்போது அங்கு வந்த கட்சியின் நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் சேயோன், திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தளபதிராஜ் மற்றும் கட்சியினர் ஒன்று திரண்டு கல்வெட்டை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் நேரமாக இருப்பதால் போலீசார் கல்வெட்டு அகற்றும் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.

மேலும் செய்திகள்