பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களை தவறாமல் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களை தவறாமல் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-03-26 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவ-மாணவிகளுக்கு உறுதிமொழி சங்கல் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சுரேஷ்குமார் தலைமை தாங்கி, உறுதிமொழி சங்கல் பத்திரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை எட்ட வேண்டும். வாக்காளர் ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் உணர்ந்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வாக்காளர்கள் தங்கள் ஓட்டுப்பதிவு செய்வது மட்டுமல்லாமல், தங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களையும் தவறாமல், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வாக்களிக்க செய்ய வேண்டும்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழி சங்கல் பத்திரங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் இந்த சங்கல் பத்திரங்களை தங்கள் பெற்றோர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களை தவறாமல் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், தாசில்தார் சங்கர், தாசில்தார் (தேர்தல்) ராஜகோபால் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்