செல்போன் செயலியை பயன்படுத்துவதன் மூலம் தேர்தல் கண்காணிப்பு பணியில் மக்களின் பங்கேற்பு - விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
செல்போன் செயலியை பயன்படுத்தி தேர்தல் கண்காணிப்பு பணியில் மக்களும் பங்கேற்கலாம் என்ற வகையில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தேனி,
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், பொதுமக்களிடம் இருந்து எளிதில் புகாரை பெற்று துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், சி-விஜில் ( cVIGIL ) என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், புகார்களை புகைப்படம், வீடியோ மூலம் பதிவு செய்யலாம். தேர்தல் விதிமீறல்கள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை புகாராக தெரிவிக்கலாம்.
இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ், ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடந்து வருகிறது. விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆண்-பெண் குரலில் விழிப்புணர்வு உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் கட்டி, பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த உரையாடலை ஒலிபரப்பு செய்யும் பிரசாரம் நேற்று தொடங்கியது.
கலெக்டர் அலுவலகத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த ‘சி-விஜில்’ செயலியானது தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என்ற வகையில் அமைந்து உள்ளது. தேர்தல் விதிமீறல்கள் நடந்தால் உடனே புகாரை இந்த செயலியில் பதிவு செய்யலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் இந்த ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.