தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கெடுபிடி, ஆன்லைனில் பணம் செலுத்தும் வியாபாரிகள்
தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் வாகன சோதனை கெடுபிடியால் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்,
தேனிக்கு அடுத்து பெரிய நகராட்சியாகவும், கேரள எல்லையை இணைக்கும் எல்லைப் பகுதியாகவும் கம்பம் விளங்குகிறது. இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரெடிமேட் ஆடை உற்பத்தி, ஏலக்காய், மிளகு, காபி போன்ற நறுமணபொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. எனவே கம்பத்துக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களின் ஊழியர்கள் கம்பம் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் மூலம் இங்கு உள்ள கடைகளுக்கு தேவையான பலசரக்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எந்திரங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் விற்பனைக்கு மொத்தமாக அனுப்புகின்றனர். பின்னர் அந்த பொருட்களுக்கு வாரம் ஒரு முறை வரும் வியாபாரிகளிடம் நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி சென்றனர். அதில் சராசரியாக ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்து கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து கமிஷன் அடிப்படையில் ஆன்லைன் சென்டரிலும், வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் அந்தந்த நிறுவன வங்கி கணக்கில் பணத்தை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். ஆன்லைனில் பணம் செலுத்துவதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களிலும், தனியார் ஆன்லைன் மையங்களிலும் பணம் செலுத்துவதற்கு வியாபாரிகள் கூட்டம் அலை மோதுகின்றன.