செம்பட்டி பகுதியில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு

செம்பட்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.

Update: 2019-03-26 22:45 GMT
செம்பட்டி, 

செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.ராமநாதபுரத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் செம்பட்டி-பழனி சாலையோரத்தில் பொதுக்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதிலும் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் 5 மணி நேரம் தான் வினி யோகம் செய்யப்படும். இதனால் தண்ணீர் பிடிப்பதற்காக குடங்களுடன் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் தண்ணீர் பிடிப்பதில் பொதுமக்களிடையே பிரச்சினை ஏற்படுகிறது. தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே கே.ராமநாதபுரத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செம்பட்டி-பழனி சாலையோரத்தில் பொதுக்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பிடிக்க செல்லும்போது விபத்தில் சிக்கி விடுவோமோ? என்ற பயத்தில் தான் தண்ணீர் பிடித்து செல்கிறோம்.

தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஆத்தூர் ஒன்றிய அலுவலம், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டால் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் குளிக்க முடிகிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்