ராணுவ வீரர்களின் வீரத்திலும், தியாகத்திலும் மோடி அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது சரத்பவார் குற்றச்சாட்டு

ராணுவ வீரர்களின் வீரத்திலும், தியாகத்திலும் மோடி அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசினார்.

Update: 2019-03-25 23:00 GMT
மும்பை, 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

நமது ராணுவ வீரர்கள் நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் தற்போதைய மத்திய அரசு அவர்களது வீரத்திலும், தியாகத்திலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி 56 அங்குலம் மார்பு கொண்டவராக இருந்தால், உளவுபார்த்ததாக பாகிஸ்தானில் சிறையில் இருக்கும் முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷண் ஜாதவை மீட்டுக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் தான் பா.ஜனதா வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்த அந்த தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு 36 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் இணைந்து விட்டன.

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் நரேந்திர மோடி 28 சதவீதம் தான் நிறைவேற்றி இருக்கிறார். இந்த தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமர் ஆக மாட்டார், என்றார்.

ரபேல் போர் விமான விவகாரம் குறித்தும் இருவரும் மத்திய அரசை கடுமையாக சாடி பேசினர்.

மேலும் செய்திகள்