சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சின்னசேலத்தில் கணிதத் தேர்வை சரியாக எழுதாததால் தனியார் பள்ளி விடுதியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-03-25 23:00 GMT
சின்னசேலம்,

சின்னசேலத்தில் புனித சிறுமலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1,600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் வெளியூர் மாணவ-மாணவிகள் தங்கி படிப்பதற்காக தனித்தனியாக விடுதிகள் உள்ளன. மாணவிகள் விடுதியில் 116 பேர் தங்கியுள்ளனர்.

இதில் தியாகதுருகம் அருகே உள்ள நூரோலை பகுதியை சேர்ந்த வேம்பன் மகள் பூங்குழலி (வயது 15) என்பவரும் தங்கியிருந்து எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். தற்போது எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இதில் நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இதற்காக மாணவி பூங்குழலி காலையில் பள்ளி வகுப்பறைக்கு சென்று தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்ததும் மதியம் விடுதிக்கு வந்த அவர், சக மாணவிகளிடம் “நான் கணிதத் தேர்வை சரியாக எழுதவில்லை. அதில் தோல்வி அடைந்து விடுவேனோ என்று பயமாக உள்ளது” என கவலையுடன் தெரிவித்துள்ளார். அப்போது சக மாணவிகள் பூங்குழலியை சமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அனைத்து மாணவிகளும் ஒரு அறையில் இருந்து அடுத்த தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பூங்குழலி தான் உடைமைகள் வைத்திருக்கும் அறைக்கு சென்று வருவதாக சக மாணவிகளிடம் கூறிச்சென்றார். ஆனால் அவர் அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவிகள், அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு பூங்குழலி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், விடுதி காப்பாளர் சகாயத்திடம் தெரிவித்தனர். உடனே அவர் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்கில் பிணமாக தொங்கிய பூங்குழலியின் உடலை பார்வையிட்டு, சக மாணவிகளிடம் விசாரித்தனர். விசாரணையில், கணிதத் தேர்வை சரியாக எழுதாததால் பூங்குழலி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பூங்குழலியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதையடுத்து போலீசார், பூங்குழலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்