நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊட்டி,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஊட்டியில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:-
வாக்குச்சாவடிகளில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வாக்குப்பதிவுக்கு முன்பு அரசியல் கட்சியினர் 50 பேரை மாதிரி ஓட்டு போட வைத்து, வி.வி.பாட் எந்திரத்தில் ஓட்டு பதிவாவதை காண்பித்து பின்னர் சீல் வைக்க வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள 1-ம் நிலை, 2-ம் நிலை, 3-ம் நிலை அலுவலர்கள் வாக்குப்பதிவு செய்யும் நபர்களின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தேர்தலில் வாக்களித்ததை குறிக்க இடது கை ஆள்காட்டி விரலில் மை சரியாக வைக்க வேண்டும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் வகையில் வி.வி.பாட் எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை திரையில் 7 நொடிகள் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து ஆயிரத்து 500 வாக்குச்சாவடி அலுவலர்களை 50, 50 பேராக பிரித்து 31 மண்டல அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது குறித்தும், தேர்தல் குறித்த சந்தேகங்களை விளக்கி கூறினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.