நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் மனு தாக்கல்
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
நெல்லை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். நாளை (புதன்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற 29-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் நேற்று மதியம் 12-30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனுவை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலரான ஷில்பாவிடம் தாக்கல் செய்தார். அப்போது கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், இன்பத்துரை, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் உடன் இருந்தனர். அ.தி.மு.க. மாற்று வேட்பாளரான முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ் கலெக்டர் ஷில்பாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த், வசந்திமுருகேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தர்மலிங்கம், கோபாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஜெனி, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் நடந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோடுகள் போடப்பட்டு உள்ளது. அந்த இடத்திலேயே போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் சோதனை நடத்திய பிறகுதான் உள்ளே செல்ல அனுமதித்தனர்.