நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வேட்புமனு தாக்கல்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-03-25 21:30 GMT
நெல்லை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று மதியம் 1-10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனுவை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷில்பாவிடம் மனுதாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன், அப்துல்வகாப், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுப.சீத்தாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தி.மு.க. மாற்று வேட்பாளரான ஞானதிரவியத்தின் மகன் சேவியர் செல்வராஜ் கலெக்டர் ஷில்பாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நிருபர்களிடம் கூறுகையில், “நான் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கங்கைகொண்டான், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்துவேன். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன். பீடி சுற்றும் தொழில் சரக்குசேவை வரியால் பாதிப்படைந்து உள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன். ராதாபுரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க பாடுபடுவேன்” என்றார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர்களாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி தளபதி முருகன், விஜயஅச்சம்பாடை சேர்ந்த இந்திராணி, பணகுடியை சேர்ந்த பகவதிகேசன், செம்பிக்குளத்தை சேர்ந்த செல்வகணேஷ், மோகன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நெல்லை தொகுதியில் இதுவரை மொத்தம் 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. வேட்பாளர் ஞானதிரவியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பூங்கோதை, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன், ராதாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்