விருதுநகர், சிவகாசியில் வாகன சோதனை: ஏ.டி.எம். மையங்களுக்கு கொண்டு சென்ற ரூ.1¾ கோடி பறிமுதல் உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை

விருதுநகர், சிவகாசியில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரூ.1 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

Update: 2019-03-25 23:15 GMT
விருதுநகர்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்ய 21 பறக்கும்படை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் இதுவரை ரூ.25 லட்சம் வரை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் சாலை வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வேனை திருச்சுழி துணை தாசில்தார் நாகேஸ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வேனில் ரூ.1 கோடியே 5 லட்சம் இருந்தது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கிளைகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம் இந்த பணத்தை அனுப்பியுள்ளதாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். கோவில்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை சென்றுவிட்டு பிற ஏ.டி.எம்.மையங்களில் பணம் நிரப்புவதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களிடம் ரூ.60 லட்சத்திற்கான ஆவணங்கள் மட்டுமே இருந்தன. இதனால் பறக்கும்படை குழுவினர் ரூ.1 கோடியே 5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பணம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல சிவகாசி பஸ் நிலையம் எதிரில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த குழுவில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ராமமூனீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்த போது அதில் ரூ.73 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. ஏ.டி.எம். மையங்களுக்கு கொண்டு செல்வதாக அதில் வந்தவர்கள் கூறினாலும் அதற்குரிய ஆவணங்களை கேட்ட போது அது இல்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த ஏ.டி.எம். மையங்களுக்கு வைக்க சென்ற வாகனம் பணத்துடன் சிவகாசி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த தகவல் தனியார் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே பிரபல வங்கியின் மேலாளர் தாலுகா அலுவலகம் வந்து எங்கள் வங்கியில் இருந்து கொடுத்து அனுப்பிய பணத்துக்கு உரிய ஆவணங்களை நாங்கள் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து இருக்கிறோம். ஆனால் அதிகாரிகள் அதை வாங்கி பார்க்காமல் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைப்பது தடைபடும். இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சிவகாசி நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி பாலாஜி என்பவர் ரூ.92 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி ரவி அந்த பணத்தை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்