திருமருகல் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

திருமருகல் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-25 22:45 GMT
திருமருகல்,

நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நெல்லை விற்பனை செய்ய தமிழக அரசு சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, குருவாடி, திருச்செங்காட்டங்குடி, கணபதிபுரம், பொறக்குடி, திருப்புகலூர், திருப்பயத்தங்குடி, அருண்மொழித்தேவன், ஆலத்தூர் உள்ளிட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் மூலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சில இடங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கி கிடக்கின்றன.

இந்த நிலையில் திருமருகல் அருகே குறும்பூர் திறந்த வெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு எடுத்து செல்லப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் திடீரென மழை பெய்தால் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் குறும்பூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து லாரிகள் அனுப்பாததால் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக எடுத்து சென்று பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்