பறக்கும் படையின் கெடுபிடியால் சந்தையில் மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

பறக்கும் படையின் கெடுபிடியால் சந்தையில் மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2019-03-25 22:45 GMT
வாணாபுரம், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வாரசந்தை நடைபெறுவது வழக்கம்.

இங்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை சுற்றுவட்ட பகுதியான தண்டராம்பட்டு, தானிப்பாடி, செங்கம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதியான சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் இந்த வாரசந்தைக்கு ஆடு, மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் அதிகளவில் வருவது வழக்கம்.

வாரசந்தைக்கு வரும் வியாபாரிகள் மாடுகளை மொத்தமாகவும், ஒன்று, இரண்டு எனவும் வாங்கி செல்வார்கள். அப்படி வாங்குவதற்காக திங்கட்கிழமைகளில் வரும் வியாபாரிகள் மொத்தமாக பணத்தை எடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபடுவதால் பணத்தை அதிகளவில் கொண்டு வந்து மாடுகளை வாங்க முடியவில்லை என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு சந்தைக்கு அதிக அளவில் பணத்தை கொண்டு வந்து மாடுகளை வாங்க முடியவில்லை. அப்படியே நாங்கள் பணத்தை எடுத்து வந்து மாடுகளை வாங்க வந்தாலும் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகின்றனர். இதனால் தேர்தல் முடியும் வரை அதிக அளவில் மாடுகளை வாங்கி கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மாடுகள் வாங்குவதற்கு பணம் எடுத்து வந்தால் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்கின்றனர். மாடுகள் வாங்குவதற்கு யாரிடம் சென்று ஆவணங்கள் பெற முடியும் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால் வாரம் தோறும் நடைபெறும் சந்தைக்கு எங்களால் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் விவசாய நிலங்களும் காய்ந்து வருவதால் மாடுகளுக்கு அதிக அளவில் சரியான முறையில் தீவனங்கள் கொடுக்க முடியாததால் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தால் அங்கு வியாபாரிகள் வருவது இல்லை. அதனால் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடு, மாடுகளை வீட்டிற்கு திருப்பி கொண்டு செல்ல கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் கூட எங்கள் தேவைகளுக்கு பணம் தேவைப்படுமாயின் அதற்காக எங்களிடம் இருக்கும் ஆடு, மாடுகளை விற்று செலவு செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் வியாபாரிகள் வரத்து முற்றிலும் குறைந்து போனதால் கடும் சிரமப்படக் கூடிய சூழல் உள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்