வேலூர், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் கதிர்ஆனந்த், ஜெகத்ரட்சகன் வேட்பு மனுதாக்கல் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்த நசீர் (39), அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த உமாசங்கர் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக கடந்த 22-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் திருத்தணி ஜோதிநகரை சேர்ந்த டி.தாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் அரக்கோணத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாவேந்தன் (40) மற்றும் எம்.எஸ்.கிருஷ்ணன் சுயேச்சை வேட்பாளராக கடந்த 22-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மனுதாக்கல் செய்வதற்காக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்டனர். அவர்கள் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும் அவர் மாலை அணிவித்தனர்.
அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கம்யூனிஸ்டு உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் கோட்டை, மக்கான் சந்திப்பு, பழைய பஸ்நிலையம், ஆற்காடு ரோடு வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
அங்கு வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமனிடம், கதிர்ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் உடனிருந்தனர். கதிர்ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி சங்கீதா கல்யாணி மனுதாக்கல் செய்தார்.
அதேபோன்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், காந்தி, முன்னாள் எம்.பி. முனிரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர். ஜெகத்ரட்சகனுக்கு மாற்று வேட்பாளராக ஆற்காடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மனுதாக்கல் செய்தார்.
முன்னதாக மனுதாக்கல் செய்ய சென்ற தி.மு.க. வேட்பாளர்கள் கதிர்ஆனந்த், ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றபோது ஏராளமான கட்சி நிர்வாகிகளும் அவர்களுடன் செல்ல முயன்றனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஒரு வேட்பாளருடன் 4 பேர் வீதம் 2 வேட்பாளர்களுடன் 8 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று கூறினர். ஆனாலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 10-க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களுடன் செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவை பூட்டினர். அப்போது வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயனும் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் விரக்தி அடைந்த ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உடனடியாக தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனை அறிந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்பு கொண்டு மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்தனர். அதன்பின் கதிர்ஆனந்த் மனுதாக்கல் செய்த நிகழ்ச்சியில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் மட்டும் அல்லாமல் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும். அதேபோன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும். தேர்தலுக்கு பின்னர் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் இருக்காது’ என்றார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், கட்சியின் மாநிலதுணைப்பொது செயலாளர் கரடிக்குடி கிராமத்தைசேர்ந்த அபிபுல்லா (வயது 44), அவரது மாற்று வேட்பாளர் அஸ்லாம் பாஷா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்பூரை சேர்ந்த கருணாநிதி, இந்திய குடியரசு கட்சி சார்பில் விருதம்பட்டை சேர்ந்த பீமாராவ் மிலிந்தர், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த நரேஷ்குமார் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பேரணாம்பட்டை சேர்ந்த ராஷித் அகமத், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த சுகுமார் ஆகியோரும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு மாற்று வேட்பாளராக அரக்கோணம் காவனூரை சேர்ந்த சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சென்னையை சேர்ந்த ராஜேந்திரன், அம்பேத்கர் புரட்சி கட்சி சார்பில் திருவள்ளூர் கல்லாப்பட்டை சேர்ந்த சவிதா ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபனிடம் மனுதாக்கல் செய்தனர்.
அதேபோன்று திருவலம் ஏரந்தாங்கலை சேர்ந்த சாதுமுத்துகிருஷ்ண ராஜேந்திரன், விருதம்பட்டை சேர்ந்த பஞ்சு உதயகுமார் ஆகியோர் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்பு மனுதாக்கல் செய்தனர்.