தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி தொடங்கியது
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்காக 9 ஆயிரத்து 257 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி 6 இடங்களில் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணியாளர்களுக்கான பயிற்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. அப்போது மண்டல பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியாளர்கள் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கி கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 1618 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப்பதிவு அன்று பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ள பணியாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயிற்சி நடக்கிறது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 அலுவலர்களும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் விளாத்திகுளத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 4, 5 ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவை நடத்த வேண்டும். மாதிரி வாக்குப்பதிவில் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கப்பட வேண்டும். குறைந்தது 50 வாக்குகளாவது அளிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடிக்குள் யார் யார் வரலாம் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை கவனமாக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். மேலும் அங்கு நுண் தேர்தல்பார்வையாளர் கண்காணிப்பும் இருக்கும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும்.
இந்த தேர்தலில் 384 வேட்பாளர்கள் வரை இணைக்கக்கூடிய வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இது முதல்முறையாக பயன்படுத்தப்பட இருப்பதால் இது குறித்தும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரத்தை வாக்குப்பதிவு முடிந்ததற்கான பட்டனை அழுத்தி சீல் செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.