குள்ளஞ்சாவடி, சிறுபாக்கத்தில் வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

குள்ளஞ்சாவடி மற்றும் சிறுபாக்கத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.6¼ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-24 22:45 GMT
குறிஞ்சிப்பாடி, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி சிவா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு பத்மநாபன் மற்றும் அதிகாரிகள் நேற்று குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே கடலூர் -விருத்தாசலம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

சோதனையில் அந்த சரக்கு வாகனத்தில் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேல்புவனகிரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (வயது 33) என்பதும், கேரளாவில் இருந்து மீன்வாங்க கடலூர் வந்ததும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் சிறுபாக்கம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி முகமதுஉசேன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக பெங்களூரு கெங்கனவள்ளியை சேர்ந்த பாஸ்கரரெட்டி (36) என்பவர் தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 100 - ஐ எடுத்து வந்தார். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிறுபாக்கம் அருகே அடரியை சேர்ந்த சின்னசாமி என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பானுகோபன், திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தில் தாசில்தார் கீதா தலைமையிலான பறக்கும்படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராசாப்பாளையம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த கோவிந்தன் என தெரியவந்தது.

அவரது கையில் இருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ.86,500 இருந்ததை கண்டுபிடித்தனர். தான் புதிதாக வீடு கட்டி வருவதாகவும், செங்கல் வாங்குவதற்காக பணத்தை எடுத்து செல்வதாகவும் கோவிந்தன் தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடலூர் தாசில்தார் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் 4 பேரிடம் இருந்து மொத்தம் 6 லட்சத்து 23 ஆயிரத்து 600 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்