தூத்துக்குடி ராஜீவ்நகர் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு - தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தூத்துக்குடி ராஜீவ்நகர் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி,
தூத்துக்குடி ராஜீவ்நகர் நகர், பாக்கியலட்சுமி நகர் பகுதியில் சுமார் 250 குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் முறையாக அரசுக்கு வரிகள் செலுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, கோர்ட்டு பட்டா வழங்க உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்து, காலதாமதம் செய்து வருவதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உள்ளனர்.
இவர்கள் நேற்று அந்த பகுதியில் திரண்டு வந்தனர். அங்கு தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு போர்டை வைத்தனர்.
தொடர்ந்து அங்கு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.