4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2019-03-24 22:45 GMT
கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி கரூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத்தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் மேலாண்மை கல்லூரியிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த பயிற்சி வகுப்புகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளான சரவணமூர்த்தி (கரூர்), மீனாட்சி (அரவக்குறிச்சி), மல்லிகா (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் குளித்தலை சட்டமன்ற தொகுதி, பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டதால் அந்த தொகுதியிலிருந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும் வந்திருந்தார். இந்த பயிற்சி வகுப்பினை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன், துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று பேர் நியமிக்கப்படுவார்கள். 1,400-க்குமேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதனடிப்படையில் மொத்தம் உள்ள 1,037 வாக்குச்சாவடி மையங்களிலும் பணிபுரியவுள்ள 5,028 பேருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு அதனடிப்படையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையத்தில், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து படிப்படியாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்கள் ஆகியவற்றை எவ்வாறு கவனமாக கையாள வேண்டும் என்பதும் குறித்து விரிவான வீடியோகாடசி யுடன் அனைவருக்கும் மண்டல அலுவலர்களால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்