கொளத்தூரில் லாரியில் மான்கறி கொண்டு வந்த பெண்கள் உள்பட 5 பேருக்கு அபராதம்

கொளத்தூரில், லாரியில் மான்கறி கொண்டு வந்த பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-03-24 22:00 GMT
மேட்டூர், 

இதுபற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் கொளத்தூர் வன சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து கொளத்தூர் நோக்கி ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த லாரியில் கொளத்தூரை அடுத்த பாலவாடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 55), சந்திரா (25), குமுதா (30), சுகன்யா (21), சுமதி (30) ஆகிய 5 பேர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் மான்கறி வைத்திருந்தது தெரியவந்தது. ஒவ்வொருவரும் தலா 2 கிலோ மான்கறி கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது. 5 பேரும் விழுப்புரம் மாவட்டம் செம்பியம்மாதேவி கிராமத்திற்கு மரம் வெட்டும் வேலைக்கு சென்றனர். அந்த பகுதியில் ஒரு மானை நாய்கள் கடித்து கொன்று போட்டு விட்டு சென்றிருந்ததை பார்த்தனர். அந்த மானை வெட்டி அதன் கறியை உப்புக்கண்டம் போட்டுள்ளனர். அதனை லாரியில் கொண்டு வந்தபோது வனத்துறையினரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து 5 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்