திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றுவேன் அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச்சு
தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவேன் என திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக அந்த கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இந்த நிலையில் செங்கம் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் ரா.காளிதாஸ், மாவட்ட செயலாளர் ஜானகிராமன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேரு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, த.மா.கா. மாவட்ட தலைவர் மணிவர்மா, புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், கோகுலம் மக்கள் கட்சி ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாச்சலம் வரவேற்றார்.
கூட்டத்தில் வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை கடந்த தேர்தலில் அ.தி.மு.க.பெற்ற வாக்குவித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.
அதனைத்தொடர்ந்து வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நம்மிடையே இல்லாவிட்டாலும் நம் இதயங்களில் என்றென்றும் அவர் குடி கொண்டு இருக்கிறார். இந்த தொகுதி என்னுடைய தொகுதி. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் செங்கம் தொகுதி அதிக வாக்குகளை பெற்றுத்தந்தது. ஜெயலலிதாவின் வழியில் ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்தி செல்கிற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வலிமை சேர்க்கும் விதமாக தோழமை கட்சினரோடு சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றிபெற செய்ய வேண்டும். நான் உங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இரவு பகல் பாராமல் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுவேன்” என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை வனரோஜா எம்.பி., மாவட்ட இணை செயலாளர் நளினி மனோகரன், துணை செயலாளர் எல்.என்.துரை, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, செங்கம் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் மனோகரன், தனஞ்செழியன், அய்யனார், சங்கர், ஒன்றிய செயலாளர் ராஜா என்ற தேவராஜன், செங்கம் நகர செயலாளர் எ.ஆனந்தன், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.