திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-23 22:17 GMT
திருவண்ணாமலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் மொத்தம் 9 லட்சத்து 71 ஆயிரத்து 811 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 99 ஆயிரத்து 430 பெண் வாக்காளர்களும், 76 இதர வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 71 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 8 சட்டமன்ற தொகுதிகளில் 1,273 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 374 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இந்த நிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவைப்படும் கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் வி.வி.பேட் எந்திரம் ஆகியவை குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கணினி மூலம் முதற்கட்டமாக தேவைப்படும் எந்திரங்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் முதற்கட்டமாக கணக்கிடப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், உதவி கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்