கூடலூரில் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்கள் காக்கப்படுமா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கூடலூரில் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்கள் காக்கப்படுமா? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2019-03-23 22:30 GMT

கூடலூர்,

அரபிக்கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் குளிர்ந்த காற்றை மேற்கு தொடர்ச்சி மலை தடுப்பதால் கேரளாவுக்கு தென்மேற்கு பருவமழை கிடைக்கிறது. பல்லுயிர் வளம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலை மராட்டியம்– குஜராத் மாநிலங்களின் எல்லை முதல் கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து உள்ளது. இதன் நீளம் 1,600 கிலோ மீட்டர் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை உலக பாரம்பரியங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி அமைந்து உள்ளது. இங்கு 5 விதமான காடுகள் உள்ளன. ஊட்டியில் சோலைக்காடுகளும், கூடலூரில் பசுமை மாறாக்காடுகளும், முதுமலையில் இலையுதிர் காடுகளும், மசினகுடியில் முட்புதர் காடுகளும், முக்குறுத்தியில் புல்வெளிகளும் உள்ளன. நீலகிரி மலைப்பிரதேசங்களில் மட்டுமே பல்வேறு தன்மையுடன் கூடிய காடுகள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் உள்ளன.

கடந்த 1969–ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு நீலகிரியை உயிர் சூழல் மண்டலமாக அறிவித்தது. கேரள, கர்நாடகா, நீலகிரி ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து 5 ஆயிரத்து 220 சதுர கிலோ மீட்டர் தூர பரப்பளவில் உயிர் சூழல் மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்த மண்டலத்தில் காவிரி, பவானி, சாலியார், பாண்டியார்–புன்னம்புழா, மாயார், குன்னூர் காட்டேரி, கரளியாறு, கல்லட்டி, கல்லாறு என 100–க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மழை பெய்யக்கூடிய பகுதியாக கூடலூர் விளங்கி வருகிறது.

வட இந்தியாவில் உள்ள சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக கூடலூர் தேவாலாவில் 6 ஆயிரம் மில்லி மீட்டர் வரை அதிக மழை பெய்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஓவேலி தென்னகத்தின் நீர் தொட்டி எனவும், கூடலூர் பகுதி ஆக்சிஜன் வங்கி எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. ஓவேலி பகுதியில் உள்ள ஆத்தூர், பார்வுட், நியூகோப், மூலக்காடு, சீபுரம், புலிக்குந்தா, லாரஸ்டன் ஆறுகளும், கூடலூர் தவளமலை, கோக்கால் மலை, காசிம்வயல், கோத்தர்வயல், செளுக்காடி, புளியாம்பாரா, கரியசோலை, ரவுசன் மலை, தேவாலா அட்டி, பொன்வயல், கைதகொல்லி, அரக்கடவு என 100–க்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் உற்பத்தியாகி பாண்டியாறு– புன்னம்பழா ஆற்றில் கலக்கிறது.

பின்னர் கேரள மாநிலம் வழிக்கடவு, சாளியாறு வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாறு கலக்கும் நீரின் மொத்த அளவு 14 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல் நடுவட்டம் பகுதியில் உற்பத்தியாகி மரப்பாலம், முதுமலை மாயாறு வழியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. இங்கு 1995 முதல் 2018–ம் ஆண்டு வரை சராசரியாக 602.9 முதல் 1,142.6 மி.மீட்டர் வரை மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழை அளவை கணக்கிட்டால் மிக குறைவாகவே உள்ளது.

சதுப்பு நிலங்கள் அழிதல், காடுகளின் பரப்பளவு குறைதல், நீருற்றுகளின் உறைவிடமாக திகழும் புல்வெளி பிரதேசங்கள் அழிதல் உள்ளிட்ட காரணங்களால் கோடை காலத்திலும் நீருற்றுகளாக திகழும் கூடலூர் பகுதி தனது ஈரத்தன்மையை இழந்து வருகிறது. நீர் அகப்பிடிப்பு பகுதிகளாக உள்ள மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள் நாளுக்குநாள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் காணப்படும் நீருற்றுகள் தற்போது இல்லை.

இதனால் மழைக்காலம் முடிந்த உடனே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வறட்சி தொடங்கி விடுகிறது. இதன் தாக்கம் வனம் பசுமை இழந்து விடுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி நியூகோப் பகுதியில் காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கூட்டமாக வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கடும் வறட்சியால் வனவிலங்குகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே கூடலூர் பகுதியில் சதுப்பு நிலங்கள், புல்வெளி பிரதேசம், வனத்தை பாதுகாத்தால் மட்டுமே வறட்சியை சமாளிக்க முடியும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்