அம்பத்தூர் அருகே தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு

அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய வாலிபர், தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-23 22:00 GMT
ஆவடி,

அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர், திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அம்பத்தூர் அருகே வந்தபோது, கோலடி ஏரியில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு கோயம்பேடு நோக்கி சென்ற தண்ணீர் லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மணிகண்டன், அதே இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த ஜெகதீசன் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (75). இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (72). கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் சேலையூர் கேம்ப் ரோடு அருகே வந்தபோது தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கிச்சென்ற அரசு பஸ், இவர்கள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரையும் மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூதாட்டி ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமி நாராயணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்