உப்பள்ளி மருத்துவமனையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது : மந்திரி சி.எஸ்.சிவள்ளி திடீர் மரணம்

கர்நாடக நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி சி.எஸ்.சிவள்ளி, மாரடைப்பால் நேற்று உப்பள்ளியில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-22 23:47 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரியாக இருந்தவர் சி.எஸ்.சிவள்ளி (வயது 57). அவர் கர்நாடக சட்ட சபைக்கு, தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சி.எஸ்.சிவள்ளிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி தார்வாரில் கட்டுமான நிலையில் இருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் அந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது மந்திரி சி.எஸ்.சிவள்ளியும் உடன் இருந்தார். அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் 1.45 மணியளவில் அவர் உப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அவரது குடும்பத்தினர் உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது அவர் அபாய கட்டத்தில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்தார். அதாவது மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியினர் அந்த மருத்துவமனை முன்பு குவிந்தனர். சி.எஸ்.சிவள்ளியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். ஆதரவாளர்களும் கண்ணீர் விட்டு கதறினர்.

மரணமடைந்த சி.எஸ்.சிவள்ளி, முதல் முறையாக கடந்த 1999-ம் ஆண்டு தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார். அதன் பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் 2013, 2018-ம் ஆண்டுகளில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

அவர் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் மந்திரியாக 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மந்திரி சி.எஸ்.சிவள்ளியின் மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சி.எஸ்.சிவள்ளியின் உடல் அவரது சொந்த ஊரான குந்துகோலில் அரசு மரியாதையுடன் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, தார்வார் மாவட்டத்தில் இன்று அரசு விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வழக்கம் போலவே நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு கூறி இருக்கிறது.

மேலும் செய்திகள்