கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் திடீர் சாவு - உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் திடீரென இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரோஜா (வயது 24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ரோஜாவுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரோஜா கருத்தடை ஆபரேஷன் செய்ய முடிவு செய்து, டாக்டர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி நேற்று கருத்தடை ஆபரேஷன் செய்ய ரோஜாவை, டாக்டர்கள் அறுவை சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்த டாக்டர்கள், ரோஜா திடீரென இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ரோஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், ரோஜாவுக்கு கருத்தடையின் போது கவனமின்றி தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்து விட்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ரோஜாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.