நான்கு வழிச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் - ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
நான்கு வழிச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.
காட்டுமன்னார்கோவில்,
சிதம்பரத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக் கப்பட இருக்கிறது. இதில் முதற்கட்டமாக சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரை 29 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரு கிறது. அந்த வகையில் காட்டுமன்னார் கோவில் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, சில விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த அளவில் தான் இழப்பீடு வழங்கப்படுகிறது என் றும் விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தெடர்பாக கூடுதல் இழப்பீடு, மற்றும் இதுவரையில் இழப்பீடு வழங்காதது பற்றியும் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மங்கலம் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர் சிவாஜி தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் பெருமாள், கடலூர் தாசில்தார் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக எங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு குறைந்த தொகையையே இழப்பீடாக தந்தனர். மேலும் சிலருக்கு அந்த தொகை கூட வழங்கப்படவில்லை.
அதோடு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக எங்களிடம் கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தவில்லை. மேலும் பிற மாவட்டங்களில் வழங்குவது போன்று, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மதிப்பீடு தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். விவசாயிகளுடைய வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தேவையான பாசன மதகுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
உரிய இழப்பீடு தொகை வழங்காவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்த அவர்கள், தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆவேசமாக பேசினர். விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர் சிவாஜி, இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் நேரில் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் அமைதியாக அங்கிருந்து சென்றனர். விவசாயிகளின் இந்த அறிவிப்பு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.