கவுந்தப்பாடியில், 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் அரசு ஊழியர் கைது
கவுந்தப்பாடியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கவுந்தப்பாடி,
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 69) இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரங்கசாமிக்கு கல்யாணம் ஆகி மகன், மகள் உள்ளனர். இவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி, அவளுடைய சகோதரி மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு 13 வயது மாணவி ஆகியோர் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரங்கசாமி மாணவிகளின் வீடுகளுக்கு அவர்களது பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது 3 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி மாணவியின் பெற்றோர்கள் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி வழக்குப்பதிவு செய்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரங்கசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
பின்னர் அவர் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.