கொளத்தூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசார் விரட்டியதால் காவிரி ஆற்றில் குதித்தவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

கொளத்தூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசார் விரட்டியதால் காவிரி ஆற்றில் குதித்தவரின் கதி என்ன? மேலும் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-03-21 23:21 GMT
கொளத்தூர்,

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த செட்டிப்பட்டி காவிரிஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் மினி டிப்பர் லாரியில் அனுமதியின்றி மணல் நிரப்பி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கிருந்த 4 பேரை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது போலீசாரை பார்த்த 4 பேரும் காவிரி ஆற்றில் குதித்துள்ளனர். இதில் 3 பேருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர்கள் காவிரி ஆற்றில் நீந்தி சென்று ஆற்றின் மறுகரைக்கு சென்று தப்பியதாகவும், ஆனால் நீச்சல் தெரியாத தெற்கு ஊஞ்சக்கொரை பகுதியை சேர்ந்த பழனி (வயது 42) என்பவர் தண்ணீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராமமக்கள் அளித்த தகவலின் பேரில் மேட்டூர் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை தண்ணீரில் மூழ்கிய பழனியை தேடினர். அத்துடன் அந்த கிராம மக்களும் பரிசல்கள் மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தநிலையில் போலீசார் விரட்டியதால் தான் இந்த சம்பவம் நடந்தது என கூறி அந்த கிராமத்தில் பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காவிரி ஆற்றில் நேற்று இரவு வரை தேடியும் பழனி கிடைக்காததால் அவர் என்ன ஆனார்? என்பது குறித்து கொளத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பழனியின் உறவினர்களும், அந்த கிராமமக்களும் காவிரி கரையில் தொடர்ந்து முகாமிட்.டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

பழனிக்கு ஜெயம்மாள் (34) என்ற மனைவியும், கிரிநாத் (11), வினோத் (8), சந்தோஷ் (5) ஆகிய குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்