குஜராத் முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக இருந்து மராட்டியத்துக்கு தப்பிச்சென்ற தேனி சிறுவன் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக இருந்து மராட்டிய மாநிலத்துக்கு தப்பிச் சென்ற தேனி சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Update: 2019-03-21 22:15 GMT
தேனி,

தேனி அருகே உள்ள போடேந்திரபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி சுந்தரி. இவர்களுக்கு வினோத்குமார் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஈஸ்வரன் மாற்றுத்திறனாளி. அவரால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

இதனால், வினோத்குமாரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய 12 வயதிலேயே குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி உள்ளனர். முறுக்கு கம்பெனிக்கு ஆட்களை அனுப்பும் ஒரு முகவர் மூலமாக சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு முதலாவது ஆண்டுக்கு சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளனர். 2-வது ஆண்டுக்கு சம்பளமாக ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளனர். 3-வது ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக நிர்ணயித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வினோத்குமார் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், அதிக நேரம் பணியாற்றுவதால் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கேட்டுள்ளான். அதற்கு அந்த முறுக்கு கம்பெனியினர், கூடுதல் சம்பளம் கொடுக்காமல், கூடுதல் வேலையை கொடுத்து கொத்தடிமையாக நடத்தி உள்ளனர். எனவே கொடுமை தாங்க முடியாமல் அவன் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு கூறியுள்ளான். இந்நிலையில், அவன் கடந்த மாதம் குஜராத்தில் இருந்து மராட்டிய மாநிலம் புனேக்கு தப்பிச் சென்றான். அங்கு புனே ரெயில் நிலையத்தில் சிறுவனை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சிறுவனின் தந்தை ஈஸ்வரன் தனது மகனை மீட்டுக் கொடுக்குமாறு தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமாரிடம் மனு கொடுத்தார். இதையடுத்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம், இந்த விவரங்கள் புனே மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், புனே குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி, ரெயில்வே போலீசாரிடம் இருந்து சிறுவனை மீட்டனர். பின்னர், சிறுவன் வினோத்குமார் அங்கிருந்து மதுரை வரை போலீஸ் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டான்.

மதுரையில் இருந்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் சிறுவன் தேனிக்கு கொண்டு வரப்பட்டான். அவனிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப வறுமையால் சிறுவனை வேலைக்கு அனுப்பியதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, சிறுவனை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிறுவன் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக குழந்தைகள் நலக்குழு தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்