நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி - ஈசுவரப்பா
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று ஈசுவரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேவேகவுடா பிரதமராக இருந்தவர். தான் வகித்த பதவிக்கு ஏற்ப பேச வேண்டும். இந்த தேர்தலில் பா.ஜனதா, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றிபெற விடமாட்டோம் என்று அவர் சொல்வது சரியல்ல.
நீங்கள் முன்பு வெற்றி பெற்ற 2 தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்று பாருங்கள். அதன் பிறகு எங்கள் கட்சி பற்றி அவர் பேசுங்கள். தங்களின் அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 தொகுதிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மறக்கக்கூடாது.
இந்த தேர்தலில் பா.ஜனதா 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. கூட்டணி அமைக்கப்பட்டவுடன் அதை மக்கள் ஒப்புக்கொள்வது இல்லை. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தகராறு போட்டுக் கொள்கிறார்கள்.
இத்தகையவர்களுக்கு எங்கள் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை காங்கிரசாரும் தோற்கடிப்பார்கள். இதை பொறுத்திருந்து பாருங்கள்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் போட்டியிட்டால், அதை பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். இதன் மூலம் காங்கிரஸ் எந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை அறிய முடியும்.
பா.ஜனதாவினருக்கு மானம், மரியாதை இல்லை என்று சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். முதலில் அவருக்கு அது இருக்கிறதா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.