கதக்கில் பி.யூ.சி. தேர்வில் ‘பப்ஜி’ பற்றி எழுதிய மாணவர் தோல்வி

கதக்கில் பி.யூ.சி. தேர்வில் ‘பப்ஜி’ ஆன்லைன் விளையாட்டு பற்றி எழுதிய மாணவர் தோல்வி அடைந்தார். ‘பப்ஜி அடிமையாக்கும் ஆபத்தான விளையாட்டு’ எனக்கூறி அவர் மறுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

Update: 2019-03-20 22:35 GMT

பெங்களூரு,

நவீன காலக்கட்டத்தில் நாம் வாழும் நிலையில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் செல்போனில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழிக்கிறார்கள். சிலர், செல்போனில் விளையாடும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

தற்போது ‘பப்ஜி’ எனும் ஆன்லைன் விளையாட்டு பிரபலமாக உள்ளது. இந்த விளையாட்டுக்கு அடிமையான மாணவர் தேர்வில் ேதால்வி அடைந்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் வருண் (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய தந்தை கல்லூரி ஒன்றில் முதல்வராக உள்ளார்.

10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருண் தேர்ச்சி அடைந்தார். தற்போது அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆடிட்டராக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கல்லூரி படிப்பில் சேர்ந்தார்.

இந்த நிலையில் தான் வருண் ‘பப்ஜி’ விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். தினமும் அதிக நேரத்தை இந்த விளையாட்டில் அவர் கழித்து வந்துள்ளார். சில நேரங்களில் கல்லூரிக்கு செல்லாமல் அவர் ‘பப்ஜி’ விளையாடியுள்ளார்.

சமீபத்தில் வருணுக்கு இறுதித்தேர்வு நடந்தது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று அவர் தேர்ச்சி அடைந்தார். மாறாக பொருளாதார பாடத்துக்கு நடந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.

பொருளாதார தேர்வுக்கான விடைத்தாளில் வருண் ‘பப்ஜி’ விளையாட்டு குறித்து விரிவாக எழுதியுள்ளார். விடைத்தாளில் ‘பப்ஜி’ விளையாட்டை செல்போனில் பதிவிறக்கம் செய்வது முதல் ‘சிக்கன் டின்னர்’ எடுப்பது வரை குறித்த அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு உள்ளார். வருணின் விடைத்தாளில் ‘பப்ஜி’ விளையாட்டு பற்றி மட்டுமே இருந்ததால் அவர் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து விடைத்தாள் திருத்திய ஆசிரியர் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தார். அவர் வருணின் பெற்றோரை வரவழைத்து சம்பவம் குறித்து கூறினர். மேலும் வருணுக்கு அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

வருணை தற்போது அவருடைய பெற்றோர் ஆலோசகரிடம் அழைத்து சென்று ஆலோசனை கொடுத்து வருகிறார்கள். மேலும் ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வுக்காக வருண் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து, வருணின் தந்தை கூறுகையில், ‘கல்லூரியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறேன். ஆனால் என் மகனே செல்போன் விளையாட்டுக்கு அடிமையாகி தேர்வில் தோல்வி அடைந்து இருப்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவனை மீட்டு நல்வழி படுத்துவேன்’ என்றார்.

இதுபற்றி வருண் கூறுகையில், ‘நான் நன்றாக படிப்பேன். ஆனால், ‘பப்ஜி’ விளையாட்டுக்கு அடிமையானதால் நான் சரியாக படிக்கவில்லை. தேர்வுக்கு 15 நாட்கள் இருந்த நிலையில் தான் நான் ‘பப்ஜி’ விளையாடுவதை நிறுத்திவிட்டு படிக்க தொடங்கினேன். ஆனால், எனது மனம் முழுவதும் ‘பப்ஜி’ விளையாட்டு பற்றிய சிந்தனையில் தான் இருந்தது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக பொருளாதார தேர்வில் தோல்வி அடைந்துள்ளேன். அந்த தேர்வின்போது ‘பப்ஜி’ விளையாட்டால் நான் சீரழிந்ததை அறிந்து எனக்கே என்மீது கோபம் வந்தது. இதனால் எனது விடைத்தாளில் ‘பப்ஜி’ விளையாட்டு குறித்து எழுதினேன். இதன் விளைவு என்னிடம் உள்ள செல்போனை பெற்றோர் நிரந்தரமாக பிடுங்கி வைத்துள்ளனர். ‘பப்ஜி’ அடிமையாக்கும் ஆபத்தான விளையாட்டு என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளேன்’ என்றார்.

மேலும் செய்திகள்