தேசப்பற்றுள்ள இளைஞர்களை உருவாக்குவது தேசிய மாணவர் படையின் நோக்கம் மண்டல தலைமை அதிகாரி பேச்சு

இளைஞர்களை தேசப்பற்றுள்ளவர்களாக உருவாக்குவதே தேசிய மாணவர் படையின் நோக்கம் என்று தேசிய மாணவர் படையின் திருச்சி மண்டல தலைமை அதிகாரி கர்னல் சிவநாதன் கூறினார்.

Update: 2019-03-20 22:30 GMT

காரைக்குடி,

தமிழ்நாடு 9–வது பட்டாலியன், தேசிய மாணவர் படைப்பிரிவு சார்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரனுக்கு கவுரவ கர்னல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய மாணவர் படையின் திருச்சி மண்டல தலைமை அதிகாரி கர்னல் சிவநாதன் விருதை வழங்கினார். கர்னல்கள் அஜெய் ஜோஜி, ரத்னா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைமை அதிகாரி பேசுகையில், தேசிய மாணவர் படையின் செயல்பாடுகள், தேச கட்டமைப்பிற்கு இளைஞர்களுடைய பங்கு முக்கியம், நாட்டின் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்படும் போது அவர்களுக்கு உதவும் வகையில் என்.சி.சி. படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் இளைஞர்களை தேசப்பற்றுள்ள மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவது தேசிய மாணவர் படைப்பிரிவின் முக்கிய நோக்கமாகும். தேசிய அளவில் 8 துணைவேந்தர்கள் கவுரவ கர்னல் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர் என்றார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது:– தேசிய மாணவர் படையின் முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 1956–ம் ஆண்டு மே 23–ந் தேதி காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட என்.சி.சி. படைப்பிரிவு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 37 கல்வி நிலையங்களில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மாணவர் படைப்பிரிவில் சேருவதற்கு அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து காரைக்குடி என்.சி.சி. 9–வது படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாந்தி ராஜேந்திரன், தேவி அலமேலு வைரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், இணைப்பு கல்லூரி முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள், காரைக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ் பிரபு வரவேற்றார். முடிவில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்