கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் பறிமுதல்

கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-03-20 23:00 GMT
ஊட்டி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து செல்லக்கூடாது, பரிசு பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கோத்தகிரியில் இருந்து ஊட்டியை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 25 அரிசி மூட்டைகள், அலுமினிய பாத்திரங்கள், உப்பு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் அரிசி மூட்டைகள், அலுமினிய பாத்திரங்களை கிராமப்புறங்களில் உள்ள மளிகை கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் அதற்கான ரசீது சரக்கு வாகன டிரைவரிடம் இருந்தது. அதன்பின்னர் வாகனம் விடுவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்