தேர்தல் பிரசாரத்திற்கு வாகனங்களை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் - அரசியல் கட்சியினருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

தேர்தல் பிரசாரத்திற்கு வாகனங்களை பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.

Update: 2019-03-20 23:00 GMT
விழுப்புரம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், மாவட்ட குற்றத்தொடர்வுத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் முறையாக பின்பற்ற வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே தேர்தல் பிரசாரத்திற்கு வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களாக இருந்தாலும் கூட பிரசாரத்திற்கு பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் கூட்டங்கள் நடத்தும் இடம், தெருமுனை கூட்டம் ஆகியவற்றுக்கும் அனுமதி பெற வேண்டும். தேர்தலை அமைதியாக நடத்த அனைத்துக்கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் இருந்தால் பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்