சயான் ரெயில் நிலையம் எதிரில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட சுரங்க நடைபாதை - பயணிகள் அவதி

சயான் ரெயில் நிலையம் எதிரில் முன்னறிவிப்பு இன்றி சுரங்க நடைபாதை மூடப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2019-03-19 22:45 GMT
மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள சயான் ரெயில் நிலையத்துக்கு தினசரி தாராவியில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக சயான் ரெயில் நிலையம் எதிரில் உள்ள சாலையின் கீழே சுரங்க நடைபாதை உள்ளது.

தினசரி அந்த வழியாக தான் தாராவி பகுதியை சேர்ந்த பயணிகள் அனைவரும் சயான் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று திடீரென மாநகராட்சி அந்த சுரங்க நடைபாதையை மூடிவிட்டது. சுரங்க நடைபாதையின் இருபுறமும் பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டன. இது தெரியாமல் வழக்கம் போல் அந்த வழியாக வந்த பயணிகள் அனைவரும் சாலையை கடந்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பயணிகள் அதிகளவில் அந்த சாலையை கடந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் சி.எஸ்.எம்.டி.யில் நடைமேம்பாலம் இடிந்து 6 பேரின் உயிரை பலிகொண்ட நிலையில், இந்த சுரங்க நடைபாதை பழுதடைந்த நிலையில் இருப்பது தெரியவந்து உள்ளது. அதை சரி செய்யவேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் பப்புகான் மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதன் காரணமாகவே அந்த சுரங்க நடைபாதை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சாலையை கடக்கும்போது, விபத்து அபாயம் இருப்பதால் அந்த சுரங்க நடைபாதையை விரைவில் சீரமைத்து திறக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்