தூத்துக்குடி தொகுதியில், வாக்காளர் விழிப்புணர்வு தபால் அட்டை அனுப்பும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு தபால் அட்டை அனுப்பும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-19 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி விழிப்புணர்வு தபால் அட்டைகளை வாக்காளர்களுக்கு அனுப்பி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலின்போது வாக்கு சதவீதம் குறைவாக பதிவான பகுதிகளை கண்டறியப்பட்டு, அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளை விட நகர்ப்புறங்களில் தான் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது. வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை மற்றும் உரிமையாகும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத 18 வயது பூர்த்தியடைந்த இளம்வாக்காளர்கள் வருகிற 26-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடந்த தேர்தலின்போது ஸ்பிக்நகரில் 35 சதவீதம், ஸ்டேட் வங்கி காலனியில் 41.44 சதவீதம், துறைமுகத்தில் 45.12 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 1000 தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தபால்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து குறைவாக வாக்கு பதிவாகியுள்ள பகுதிகளில் மொத்தம் 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தபால் ஊழியர்கள் வாக்காளர்களிடம் தபால் அட்டைகளை வழங்கி நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி தலைமை கோட்ட தபால் கண்காணிப்பாளர் ஷீஜா, உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், தலைமை தபால் அலுவலர் ராஜா, தபால்துறை மக்கள் தொடர்பு அலுவலர் மனோகர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டு இருந்த விழிப்புணர்வு கோலங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்