அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பிரசார பணிகளை தொடங்கினார் - செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பிரசார பணிகளை தொடங்கினார். அதை தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Update: 2019-03-19 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பிரசார பணியை தொடங்கியுள்ளார். நேற்று முதற்கட்டமாக திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா.வினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன், பிரசாத், பா.ஜ.க. கோட்ட அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் நேரு, பொதுச்செயலாளர் ஜீவானந்தம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, அவைத் தலைவர் ஸ்ரீகுமரன், பொருளாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் “ஏப்ரல் 18-ந் தேதியன்று நடைபெறும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபடுவது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், வனரோஜா எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் நளினி மனோகரன், அமுதா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் நைனாக் கண்ணு, நகர செயலாளர் ஜெ.செல்வம், நகர்ப்புற கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

இதைத்தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி சார்பிலான வேட்பாளர் அறிமுக கூட்டம் வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கும், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கான அறிமுக கூட்டம் கீழ்பென்னாத்தூர் சங்கீதா திருமண மண்டபத்தில் மதியம் 12 மணிக்கும் நடக்கிறது.

செங்கம் தொகுதி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு செங்கம் எஸ்.வி.திருமண மகாலிலும், பகல் 12 மணிக்கு கலசபாக்கம் தொகுதி சார்பில் காஞ்சி எஸ்.எஸ்.திருமண மண்டபத்திலும் அறிமுக கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்கள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையிலும், மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடக்கிறது.

மேலும் செய்திகள்